உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நெல்லையில் சமபந்தி விருந்து கலெக்டர் ஷில்பா பங்கேற்பு


உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நெல்லையில் சமபந்தி விருந்து கலெக்டர் ஷில்பா பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 10:30 PM GMT (Updated: 1 Dec 2018 11:56 AM GMT)

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நெல்லையில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டார்.

நெல்லை,

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நெல்லையில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டார்.

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமபந்தி விருந்து நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டார். அவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1–ந் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நடந்து வருகிறது.

104 நம்பிக்கை மையங்கள்

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள், 8 சுக வாழ்வு மையங்கள், 4 அரசு ரத்த வங்கிகள், 2 ஏ.ஆர்.வி. மையங்கள், ஒரு இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த மருந்து இல்லை. ஆனால் வாழ்நாளை நீட்டிக்க பல மருந்துகள் அரசு மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்

தொடர்ந்து அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவை செய்தவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் செந்தில்குமார், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story