மழை, வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு, துருவநாராயண் எம்.பி. உத்தரவு


மழை, வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு, துருவநாராயண் எம்.பி. உத்தரவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துருவநாராயண் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு,

மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்.பி.க்கள் துருவநாராயண், பிரதாப் சிம்ஹா, சிக்கமாது எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தான் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ஜோதி, உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் துருவநாராயண் எம்.பி. பேசியதாவது:- மைசூரு மாவட்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தாலும், வறட்சியாலும் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்படி இருந்தும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்காமல் உள்ளனர். உடனே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். வனப்பகுதியில் செல்லும் சாலைகளில் அனைத்து இடங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டாம். சாலையையொட்டி பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் தடுப்புச்சுவர் அமைத்தால் போதும்.

அதுபோல் சில பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளன. குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினரும், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் நெல் மற்றும் சோளத்திற்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும் விவசாயிகள் நெல் கொள்முதல் மையம் அமைக்க வலியுறுத்தி வருகிறார்கள். எனவே மைசூரு மாவட்ட பஞ்சாயத்து சார்பில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story