மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தெற்கு தெரு, வடக்கு தெரு, கருவப்பில்லைநத்தம், கூப்பாச்சிக்கோட்டை, கீழதிருப்பாலக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் மரக்கிளைகளை போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இதனால் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டையில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் மன்னார்குடி- வடசேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டி, வரம்பியம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கக்கோரி நேற்று பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி வெட்டுகுளம் புதுப்பாலம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதிபாஸ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விட்டுக்கட்டி விவசாய சங்க தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story