எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம்


எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹாசன்,

ஹாசன் டவுன் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று 1,865 கோடி மதிப்பிலான சாலை வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கலந்துகொண்டு ரிமோட் பொத்தானை அழுத்தி சாலை பணிகளை தொடங்கி வைத்தனர். பானவாரா-உளியார், பேளூர்-பிளிகெரே 2 வழிச்சாலை, சென்னராயப்பட்டணா-ஹாசன் இடையேயான சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

முன்னதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் பெங்களூருவில் இருந்து ஹாசன் டவுனுக்கு வந்தனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையில் நடந்த இந்த விழாவை குமாரசாமியும், நிதின் கட்காரியும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:- கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் பங்கு மிக முக்கியமானது.

சிராடி மலைப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்க ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இது இன்னும் 6 மாதங்களில் முடிவடைந்து விடும். இந்த திட்ட அறிக்கை முடிந்தவுடன் டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

ஹாசனில் இரு தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். சென்னராயப்பட்டணா-ஹாசன் இடையேயான சாலையை விரிவுப்படுத்தி 4 வழிச்சாலையாக மாற்றப்படும். இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ரூ.1,865 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. என்னுடைய பதவி காலம் முடிவடைவதற்குள் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

மைசூரு-பெங்களூரு இடையே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழிச்சாலையை அதிநவீன முறையில் மேம்படுத்தப்படும். பெங்களூரு-சென்னை இடையே சாலை வளர்ச்சி பணிக்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நாட்டில் உள்ள சாலை வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:- மத்திய-மாநில அரசு இணைந்து ரூ.1,865 கோடி செலவில் ஹாசனில் சாலை வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி பணி தொடங்க விழாவுக்கு வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹாசனில் சாலை வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய கடிதத்திற்கு மதிப்பளித்து ஹாசனில் சாலை வளர்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று தேவேகவுடா மனு கொடுத்தபோது, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆதரவான பதில் அளித்தார். இது வரவேற்கத்தக்கது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து இன்னும் பல வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது. எனது தலைமையிலான மாநில அரசு ஹாசனுக்காக மட்டும் செயல்படவில்லை. கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே என்னுடைய கடமை.

என்னுடைய தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 4 முறை தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பானவாரா-உளியார் சாலையை விரிவுப்படுத்துவதால் பெரிய தொழிற்சாலைகளுக்கு அனுகூலமாக இருக்கும்.

இந்த சாலையை விரிவுபடுத்துவதால் பேளூர், அலேபீடு, சரவணபெலகோலா உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கு செல்லும் சுற்றலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதனால் சுற்றுலா தலமும் மேம்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, புட்டராஜூ, ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், கலெக்டர் ரோகிணி சிந்தூரி, பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரீத்தம் ஜே.கவுடா (ஹாசன்), கே.எஸ்.லிங்கேஷ் (பேளூர்), கே.எம்.சிவலிங்கேகவுடா (அரிசிகெரே), சி.எம்.பாலகிருஷ்ணா (சென்னராயப்பட்டணா) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஹாசனில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக முதல்-மந்திரி, மத்திய மந்திரி மற்றும் மாநில மந்திரிகள் என முக்கிய பிரமுகர்கள் வந்ததால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா தலைமையில் ஹாசன் டவுனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற ஹாசன் டவுன் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப்பகுதியில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Next Story