அறந்தாங்கி, கீரமங்கலம், திருவரங்குளம் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


அறந்தாங்கி, கீரமங்கலம், திருவரங்குளம் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி, கீரமங்கலம், திருவரங்குளம் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் கஜா புயலால் மின்மாற்றிகள், மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த மின்மாற்றி, கம்பங்களை மின்சாரத்துறை பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில், அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வழங்க கோரி சம்பவத்தன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த அதிகாரிகள் உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். உறுதி அளித்து 10 நாட்கள் ஆகியும் மின்இணைப்பு கொடுக்கவில்லை என கோரி ஆயிங்குடி சாலையில் மரக்கட்டைகளை போட்டு நேற்று மீண்டும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்கிறார்கள் என அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மின்ஊழியர்கள் 65 மின் மாற்றிக்கான மின்கம்பங்களை லாரியில் எடுத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வழியாக அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் வந்தார்.

அப்போது அமைச்சரிடம் பொதுமக்கள் கூறியதாவது:- ஆயிங்குடி கிராமத்தில் மொத்தம் 9 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கூட மின்இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது. எங்கள் கிராமத்தில் மட்டும் 200 மின்மாற்றி, கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. ஆனால் தற்போது 65 மின்மாற்றி கம்பங்கள மட்டுமே கொண்டு வந்துள்ளனர். ஆயிங்குடி கிராமத்திற்கு நாகுடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. நாகுடியில் உள்ள மின்சார அலுவலர்கள் மின்இணைப்பு கொடுக்க பணம் கேட்கின்றனர் என புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக செல்போன் மூலம் அமைச்சர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள தடியமனை கிராமத்தில் கஜா புயல் பாதிப்பால் மரங்கள் உடைந்து விழுந்து மின்கம்பங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடி நீர் தொட்டிகளுக்கு மின்இணைப்புகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும் தடியமனை பகுதியில் மின்சாரம் வழங்க எந்த பணிகளும் நடைபெறவில்லை. அதேபோல நெடுவாசல் தோப்பு குடியிருப்பு பகுதிக்கும் 15 நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புயல் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து 15 நாட்கள் ஆகியும் மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை என்றும், குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறி தடியமனை பொதுமக்கள் அணவயல் மின்சார வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல நெடுவாசல் தோப்பு குடியிருப்பு பகுதி மக்கள் நெடுவாசல் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் திருவரங்குளம் வல்லாத்திரைகோட்டையில் மின்சாரம் கேட்டு பொதுமக்கள் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Next Story