மண்எண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீ விபத்து சிகிச்சை பலனின்றி சிறுமி சாவு


மண்எண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீ விபத்து சிகிச்சை பலனின்றி சிறுமி சாவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:01 AM IST (Updated: 2 Dec 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

போரிவிலியில், மண்எண்ணெய் விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானாள்.

மும்பை,

மும்பை போரிவிலி கண்பத் பாட்டீல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா தேவி (வயது40). இவரது மகள் ரிங்கு (7). சம்பவத்தன்று ரிங்கு பக்கத்துவீட்டு சிறுமி ஷிவானியுடன் (10) வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது ரீட்டா தேவி மண்எண்ணெய் விளக்கை எரிய வைத்தார். இதில் எதிர்பாராதவிதமாக விளக்கு கவிழ்ந்து கீழே விழுந்தது. மேலும் விளக்கில் இருந்த மண்எண்ணெய் கொட்டி ரீட்டா தேவியின் உடலில் தீப்பிடித்தது.

இந்த தீ அருகில் நின்று விளையாடி கொண்டு இருந்த ரிங்கு மற்றும் ஷிவானி மீதும் பரவியது. 3 பேரின் உடலிலும் தீ பிடித்ததால் அவர்கள் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துவீட்டு பெண் சுனிதா (36), தண்ணீரை ஊற்றியும், போர்வையை போட்டும் 3 பேர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்தார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காந்திவிலி அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் 98 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ரிங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 90 சதவீதத்திற்கு மேல் காயமடைந்த ரீட்டா தேவி, ஷிவானி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story