சிவகாசி நகராட்சிக்கு ரூ.2 கோடி இழப்பு; முன்னாள் நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு


சிவகாசி நகராட்சிக்கு ரூ.2 கோடி இழப்பு; முன்னாள் நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Dec 2018 10:28 PM GMT (Updated: 1 Dec 2018 10:28 PM GMT)

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் பாரபட்சம் காட்டப்படுவதால் நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நகராட்சி முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

சிவகாசி,

தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக சிவகாசிநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதை அள்ள போதிய துப்புரவு பணியாளர்களும் இல்லை. இதை கண் காணித்து நடவடிக்கை எடுக்க சுகாதார அதிகாரிகளும் முன்வருவ தில்லை. அதே போல் நகரில் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. பி.எஸ்.ஆர்.ரோடு சேதம் அடைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அந்த வழியாக தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் சைக்களில் சென்று வருகிறார்கள். மோசமான ரோட்டால் மாணவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை தொடர்கிறது.

பல லட்சம் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பல மாதங்களாக செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆண்டுக்கு 100 சதவீதம் வரி வசூல் செய்து தொடர்ந்து சாதனை படைத்து வரும் சிவகாசி நகராட்சி நிர்வாகம் ஏனோ அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வரு வதில்லை. ஆனால் நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்ற காரணத்தை கூறி வரிகளை உயர்த்த மட்டும் பொது மக்களிடம் அனுமதி கேட்கிறது. சிவகாசியில் உள்ள பல பெரிய கட்டிடங்களுக்கு குறைந்த வரிகளும், சிறிய அளவிலான குடியிருப்புகளுக்கு அதிக வரியும் வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது. பாரபட்சம் இன்றி அரசு அறிவித்த அளவில் வரி வசூல் செய்தால் ஆண்டுக்கு ரூ.2 கோடி கூடுதலாக நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் ஏனோ நகராட்சி அதிகாரிகள் சிலருக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள். இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு வர வேண்டிய ரூ.2கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்து வரும் சிவகாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பட்டதாரி காங்கிரஸ் மாநில நிர்வாகி மைக்கேல் உடன் இருந்தார்.


Next Story