சாத்தூர் அருகே பயங்கரம்; வாலிபரை கொன்று உடல் எரிப்பு


சாத்தூர் அருகே பயங்கரம்; வாலிபரை கொன்று உடல் எரிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கொன்று பாழடைந்த பம்பு செட்டில் போட்டு உடலை எரித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அணைக்கரடிப்பட்டியை சேர்ந்தவர் அழகர். இவருக்கு சொந்தமான நிலம் இருக்கன்குடி ரோட்டில் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் உள்ளது. அங்கு பம்பு செட் அமைத்து விவசாயம் நடந்து வந்துள்ளது. ஆனால் தற்போது விவசாயம் செய்யாத நிலையில் மோட்டார் எதுவும் இல்லாமல் பம்பு செட் பாழடைந்த நிலையில் கிடக்கிறது.

இந்த நிலையில் அழகரின் மகன் நேற்று முன்தினம் மாலை அந்தப்பக்கமாக சென்றுள்ளார். அப்போது பம்பு செட்டில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊருக்கு ஓடி வந்து ஊர்மக்களிடமும், அம்மாபட்டி போலீசுக்கும் அவர் தகவல் கொடுத்தார்.

போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்தவரின் உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. கைலி அணிந்திருந்தார். அவருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். ஆனால் பிணமாக கிடந்தவர் யார் என்று தெரியவில்லை. எனவே அவர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் பாழடைந்த பம்பு செட் சாத்தூர்-இருக்கன்குடி மெயின்ரோட்டில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. எனவே இரவு நேரத்தில் வாலிபரை கொலை செய்து, அங்கு கொண்டு வந்து உடலை எரித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்றும், இந்த சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளிகள் யார்? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை செய்யப்பட்டவரின் உடல் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story