மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட வேண்டும் - வைகோ பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரை,
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகள் தி.மு.க. சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ராசா கூறியிருக்கமாட்டார். அப்படி அவர் சொல்லியிருந்தால் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும். மேகதாது பகுதியில் அணை கட்டினால் மேட்டூர் அணை வறண்டு விடும். இதுபோல், தமிழகத்தின் ஒரு பகுதியும் வறண்டு விடும். இதனை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். அப்படி செய்தால்தான் மத்திய அரசு பயப்பட்டு அணை கட்டுவதை தடுக்கும். மேகதாது அணை விவகாரத்தில் வெளிப்படையாக அனுமதி தர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியாக இருக்கும். மத்திய அரசு, மாநில அரசை காலில் போட்டு மிதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்து செயல்பட்டு வருகிறது. வருகிற 4–ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி போராட்டத்தில் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.