இந்திய அளவில் முதல் முறையாக கல்லூரி மாணவர்கள் மூலம் கிராமங்கள் தத்தெடுப்பு; அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


இந்திய அளவில் முதல் முறையாக கல்லூரி மாணவர்கள் மூலம் கிராமங்கள் தத்தெடுப்பு; அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:45 PM GMT (Updated: 1 Dec 2018 11:29 PM GMT)

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்கள் மூலம் கிராமங்களை தத்து எடுக்கும் நிகழ்ச்சி இந்திய அளவில் முதல் முறையாக ஏம்பலம் தொகுதியில் நடைபெற உள்ளது. அது தொடர்பாக அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாகூர்,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் மூலம் கிராமங்களை தத்து எடுக்கும் நிகழ்ச்சி இந்திய அளவில் முதல் முறையாக ஏம்பலம் தொகுதியில் நடைபெற உள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, சேலியமேடு, அரங்கனூர், குடியிருப்புபாளையம், கரிக்கலாம்பாக்கம், செம்பியபாளையம், கம்பிளிக்காரன்குப்பம், கோர்க்காடு, ஏம்பலம் ஆகிய கிராம பஞ்சாயத்தில் உள்ள சுமார் 35 கிராமங்களை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் தத்தெடுக்க உள்ளனர்.

பின்னர் அந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மருத்துவமுகாம், துப்புரவு பணி, மரம் நடுதல் போன்றவற்றை செயல்படுத்த உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) முதல் 12–ந் தேதி வரை இந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

அதனையொட்டி கிருமாம்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கந்தசாமி தலைமையில் கிராம உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒரு முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசும்போது, ‘‘கிராமங்களை மாணவர்கள் தத்து எடுக்கும் திட்டத்துக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். அவர்களுடன் சேர்ந்து நமது கிராமங்கள் வளர்ச்சி அடையவும், சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 7 பேர் மாவட்ட, மாநில அளவில் நடந்த கிராமிய கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய அளவில் டெல்லியில் நடக்கும் போட்டிக்கு செல்கின்றனர். அவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் செல்கின்றனர். இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களை அமைச்சர் கந்தசாமி வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கனி கண்ணன், அமர்நாத், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story