நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 250 இடங்களில் சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு


நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 250 இடங்களில் சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இடைநிலைக்குழு செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களின் வீடுகளையும், பொருட்களையும் இழந்து உணவு, உடையின்றி மாற்று இடமில்லாமல் அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள், காலனி வீடுகள் அனைத்திற்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். கான்கிரீட் வீடுகளின் பாதிப்பின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண அறிவிப்பை மறு ஆய்வு செய்து நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்படும் என்று பாதிக்கப்ட்ட அனைவரிடத்திலும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வங்கி புத்தகம், ஆதார் அட்டை பெற்றுக்கொண்டு தற்போது முற்றிலுமாக இடிந்த குடிசை வீடுகளுக்கு மட்டுமே என்ற நிவாரணம் என்று கூறி புதிதாக புகைப்படம் எடுத்து அவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் தமிழக அரசின் அறிவிப்பை கண்டித்தும், அனைத்துவீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக்கோரியும் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story