சேவூர் போலீஸ் நிலையத்தில் பழமையான 3 நிலை நடுகல்; தமிழர்களின் வீரம், தியாகத்தை வெளிப்படுத்துகிறது
தமிழர்களின் வீரம் மற்றும் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் சேவூர் போலீஸ் நிலையத்தில் பழமையான 3 நிலை நடுகல் இருக்கிறது.
சேவூர்,
திருப்பூர் வரலாற்றுச்சுவடுகள் மைய வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது:–
செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. சே என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள் நிறைந்த மேய்ச்சல் பகுதியாக ஒரு காலத்தில் விளங்கியது. தற்போது சிறுமுகை மற்றும் சத்தி பகுதியிலிருந்து தொடங்கும் வனப்பகுதி அக்காலத்தில் சேவூர் வரையிலும் இருந்தது. விலங்குகள் ஆவினங்களை தாக்கிய போது அவற்றை எதிர்த்துப் போரிட்டுக் கொன்ற அல்லது தன் உயிரை இழந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் வீரத் தமிழர்களின் மரபாக இருந்தது. அத்தகைய வீரனின் நடுகல் ஒன்றை சேவூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. அதைப் பற்றிய ஆய்வினை திருப்பூர் வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையம் மேற்கொண்டது.
சேவூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த நடுகல்லானது 2015–ம் ஆண்டு எஸ்.பி அமித்குமார் முயற்சியால் சேவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இது போர்களை விளக்கும் நடுகல் என அறியப்பட்டது.
இந்த வீர நடுகல்லானது மூன்று நிலைகளை குறிக்கும் நடுகல் ஆகும். புலிப்பட்டான் கல் மற்றும் சதிக்கல் இரண்டுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட சிறப்பான நடுகல் வகையை சார்ந்தது. இந்த நடுகல்லின் கீழ்வரிசையில் ஒரு வீரன் வில்லுடன் புலியை தாக்குவது உள்ளது. அவன் மனைவி அருகில் காணப்படுகிறாள். இது முதல் நிலையாகும். இதில் புலியுடன் நடந்த போரில் இறந்த வீரனும் அதனால் சிதையேறும் அவ்வீரனின் மனைவியும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இரண்டாம் நிலையானது வீரமரணம் எய்திய வீரனையும் உடன்கட்டை ஏறிய அவனது மனைவியையும் சாமரம் வீசும் தேவகன்னிகைகள் வானுலகம் அழைத்துச் செல்லும் நிலை அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையானது வீரனும் அவனது மனைவியும் சிவலோகத்தை அடைகிறார்கள். சிவலிங்க உருவமும் ரிஷப உருவமும் காட்சியளிக்கிறது. வீரனின் ஆன்மா சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கும் காட்சி உள்ளது. இவ்வாறு வீரனும் அவன் மனைவியும் சிவனடி சேர்கிறார்கள். இதுவே இறுதி நிலையாக உள்ளது. இவ்வாறான சிறப்பான நடுகற்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் நடப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.