‘கஜா’ புயல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


‘கஜா’ புயல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2018 4:00 AM IST (Updated: 3 Dec 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவரை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. அங்கிருந்து கார் மூலம் நெல்லை சங்கர்நகர் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்யவில்லை. பாதிப்புகள் பற்றிய முழு அளவீடுகளும் தமிழக அரசுக்கு தெரியவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கவில்லை. அத்தகைய மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலேயே தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.

சிலை அமைப்பதற்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

2 ஆண்டுகள் காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார். ஆனால் தற்போது வரை இந்த அரசு மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு சமூக நலத்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

கேரளா மாநில கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது மட்டுமல்லாமல், உலக நாடுகளின் கழிவுகளும் இந்தியாவில்தான் கொட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணை பிரச்சினை உள்பட எந்த விஷயத்திலும் தமிழக அரசு உரிய காலத்தில் செயல்படவில்லை. இந்த அரசு எல்லா விஷயத்திலும் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது. தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்படும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் தமிழக அரசு தன்பக்கம் உள்ள பல பிரச்சினைகளை சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை.

ஆலை மூடி இருக்கும்போது, மாசு குறித்து ஆய்வு செய்யும்போது, எப்படி உண்மையான அறிக்கை வரும். தன்னுடைய நியாயங்களை எடுத்து வைக்காமல் கோர்ட்டுக்கு செல்லும்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் இப்படிப்பட்ட பதிலை தர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு அரசு இருப்பதுதான் தெரிகிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அடிப்படை பிரச்சினைகளை கோர்ட்டில் சரிவர எடுத்து வைக்காமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story