ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு


ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:14 AM IST (Updated: 3 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டம் மீனவர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நட்நதது. இதில் சேசுராஜா, எமரிட், சகாயம், சேசு இருதயம், இருதய ராஜ் உள்ளிட்ட மீனவர் சங்க தலைவர்களும், மீனவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– இலங்கை கடற்படை கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகை மோதி கடலுக்குள் மூழ்கடித்ததுடன் அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டித்தும், அந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்க செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மீன்பிடிக்க செல்லும் போது படகில் எக்காரணம் கொண்டும் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு செல்லக்கூடாது. மீன்துறையினரால் வழங்கப்படும் அனுமதி டோக்கனை கொண்டு செல்வதுடன், அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

கடலுக்கு செல்லும்போது வாக்கி டாக்கி பயன்படுத்தக்கூடாது. ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் அதனை பயன்படுத்தி கடற்படையினர் மற்றும் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மற்ற நேரங்களில் அவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த தகவலை கடலோர பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story