மத்திய அரசு வழங்கும் நிவாரண தொகை போதாது - மதுரையில் வைகோ பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரை,
கஜா புயலை விட கொடுமையான துன்பத்தை தருகிறது, மத்திய அரசு வழங்குவதாக கூறிய நிவாரண தொகை. அந்த நிவாரண தொகை போதாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ரூ.25 ஆயிரம் கோடி தேவைப்படும். அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அதிக நிவாரண தொகை வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று, கோடிசுவரனாக இருந்தவர் இன்று பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை. நாங்கள் முதல்கட்டமாக புதுக்கோட்டை, நாகை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். மேலும் நிவாரணம் வழங்க இருக்கிறோம். பிரதமர் மோடி இரண்டு போதையில் உள்ளார். ஒரு நாளைக்கு 10 உடைகள் அணியும் ஆடையலங்கார போதை. மற்றொன்று, வெளிநாட்டு பயணம் செய்யும் போதை. இவரை அதில் இருந்து மீட்க முடியாது. ஆனால் அவரிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.