கைதி மர்ம சாவு: காலாப்பட்டு சிறையில் நீதிபதி விசாரணை


கைதி மர்ம சாவு: காலாப்பட்டு சிறையில் நீதிபதி விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2018 5:00 AM IST (Updated: 3 Dec 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

கைதி மர்ம சாவு தொடர்பாக காலாப்பட்டு சிறையில் நீதிபதி விசாரணை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் ஜெயமூர்த்தி(21). கூலித் தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பாகூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாளே அதாவது கடந்த 27–ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயமூர்த்தி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து ஜெயமூர்த்தியின் உறவினர்கள், கரிக்கன்நகர் பகுதி மக்கள் திரண்டு வந்து புதுவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்து போனார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிபதி சரண்யா புதுவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஜெயமூர்த்தியின் உடலை பார்வையிட்டார். பின்னர் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜெயமூர்த்தியின் உடல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனையின் நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பாகூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்து சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் திருமால் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தார்.

இதற்கிடையே ஜெயமூர்த்தியின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும்படி முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக நீதிபதி சரண்யா நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி சரண்யா மற்றும் வருவாய் அதிகாரிகள் 4 பேர் நேற்று காலை சிறைக்கு சென்று அங்கு விசாரணை நடத்தினார். அப்போது சிறைக்காவலர்கள், ஜெயமூர்த்தியுடன் தங்கி இருந்த கைதிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அவர் தங்கி இருந்த அறையை பார்வையிட்டார். ஜெயில் பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று(திங்கட்கிழமை) பாகூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.


Next Story