காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி பெருமிதம்
காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதம் அடைந்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்கம் மற்றும் சைல்டு பவுன்ட் இந்தியா நிறுவனம் சார்பில் கடற்கரை சாலையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதன் தொடக்க விழாவிற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, ஊர்வத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரியில் பெண்கள் 52 சதவீதமும், ஆண்கள் 48 சதவீதமும் உள்ளனர். இந்த புள்ளி விவரம் ஒன்றின் மூலமே புதுச்சேரியில் பெண்களுக்கான பாதுகாப்பை தெரிந்து கொள்ள முடியும். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். பொதுத் தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து வருகின்றனர்.
குடும்பங்களிலும் பெண்கள்தான் பொறுப்பாக நடந்து கொள்கின்றனர். எனவே பெண்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், சமூகத்திற்கும் உண்டு. வட மாநிலங்களில் கற்பழிப்பு, மானபங்கப்படுத்துவது போன்றவைகள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மேலோங்கி நிற்கிறது. புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புக்கு பல திட்டங்கள் உள்ளன. 1–ம் வகுப்பு முதல் பல்கலைக்கழக படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.
கடந்த 2½ ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கல்வி, பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி சம உரிமை கொடுக்கும் மாநிலமாகவும் உள்ளது. அரசால் மட்டும் அனைத்து விழிப்புணர்வு திட்டங்களையும் செய்துவிட முடியாது. எனவே, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவை. இதுபோன்ற விழிப்புணர்வை கிராமப்புறங்களில் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.