வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் 2 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பைரப்பா. விவசாயி. இவருடைய விவசாய நிலம் நொகனூர் காப்புக்காட்டை ஒட்டி உள்ளது. நொகனூர் காப்புக்காட்டில் 75 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று நாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் சிலர் இரவு நேரத்தில் தங்கள் விவசாய நிலத்தில் காவலுக்கு இருப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு பைரப்பா தனது நிலத்திற்கு காவலுக்கு சென்றார். நள்ளிரவில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு வந்தன. அப்போது ஒரு காட்டு யானை மட்டும் பைரப்பாவை துரத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பைரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய அந்த யானை பைரப்பாவை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பைரப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து நிலத்தில் காவலுக்கு இருந்த மற்ற விவசாயிகள் ஓடி வந்து யானைகளை விரட்டியடித்தனர். பின்னர் பைரப்பாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம், வனவர் கதிரவன், வனக்காவலர் ஆறுமுகம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பைரப்பாவை நலம் விசாரித்து, சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
சூளகிரி அருகே உள்ள போடூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வப்பா (வயது 65), விவசாயி. இவர் நேற்று அதிகாலையில் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று செல்வப்பாவை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story