போலீஸ்காரர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு


போலீஸ்காரர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:30 AM IST (Updated: 4 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் 2-ம் நிலை போலீசாருக்கான தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் எடை, மார்பு அளவு சரிபார்ப்பு, கயிறு ஏறுதல், ஒட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சிகள் நேற்று தொடங்கியது. தஞ்சையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் 228 பேர் பங்கேற்றுள் ளனர். இவர்களுக்கு 7 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த பயிற்சியை போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக பயிற்சி பெற வந்துள்ள போலீசார்களில் பொறியியல், முதுநிலை பட்டதாரிகள் என்று படித்தவர்கள் அதிகமாக வந்துள்ளர்கள். பயிற்சி காலத்தில் இதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு பயிற்சி கொடுப்பவர்களுக்கு கீழ்பணிந்து பயிற்சி பெற வேண்டும். எவ்வளவு காலம் நீங்கள் போலீசாராக இருப்பீர்களோ அந்த காலம் வரை ஒழுக்கம் அவசியம்.

சாதாரணமாக மக்களுடன் மக்களாக இருந்த நீங்கள் தற்போது போலீஸ்காரர்கள். எனவே மற்றவர்களுக்கு எதை கற்றுதர விரும்புகிறீர்களோ அதை முதலில் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைபிடிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படாது. இந்த பயிற்சி உங்களை தயார் செய்யும் களம். இந்த களத்தில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களிடம் உள்ள தனித்திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நிறைய அனுபவம் உள்ளவர்கள் தான் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். எனவே இந்த பயிற்சி காலத்தில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி காலத்தில் குறைகள் இருந்தால் அதை பயம் இல்லாமல் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களிடம் தெரிவிக்கலாம். அதே போல் இங்கு ஒரு புகார் பெட்டி வைக்கப்படும். அதில் உங்களது குறைகளை புகாராக எழுதி போடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேசுகையில், “பயிற்சி காலத்தில் பொறுமை மிகவும் அவசியம். அதிகம் படித்துவிட்டு இந்த வேலைக்கு வந்து விட்டோமே என்று வருத்தம் அடைய வேண்டாம். இதில் இருந்து உயர் பதவிகளுக்கு செல்லலாம்.

7 மாத கால பயிற்சி மிகவும் கடினமாக தான் இருக்கும். பயிற்சி தரும் அலுவலர்களுக்கு எல்லோரும் ஒன்று தான். தேவை இல்லாமல் விடுப்பு எடுத்தால் பயிற்சி காலம் நீடிப்பு ஏற்படும். நீங்கள் மற்றவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்த பணிக்கு வந்துள்ளர்கள். எனவே உங்களுக்குள் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை மறந்துவிட வேண்டும்.

பயிற்சி காலத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்த பயிற்சியில் மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த 7 மாத கால பயிற்சியில் எல்லோரும் ஜாலியாக இருக்கலாம். ஆனால் அதை தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது”என்றார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், போலீஸ் பயிற்சி மைய துணை முதல்வர் முருகேசன், பயிற்சியாளர் சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story