குத்தகையை புதுப்பிக்காததால் சிற்றருவியை கைப்பற்ற வனத்துறை முடிவு நகரப்பஞ்சாயத்துக்கு பரபரப்பு கடிதம்
குத்தகையை புதுப்பிக்காததால் சிற்றருவியை கைப்பற்ற முடிவு செய்திருப்பதாக குற்றாலம் நகரப்பஞ்சாயத்துக்கு வனத்துறை பரபரப்பு கடிதம் எழுதியுள்ளது.
தென்காசி,
1962-ம் ஆண்டு வனத்துறையானது குற்றாலம் நகரப்பஞ்சாயத்து ரீதியாக சிற்றருவியை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொடுத்தது. மேலும் சென்னை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுப்படி வருடத்துக்கு ஒருமுறை நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு ரூபாய் செலுத்தி சிற்றருவி பயன்பாட்டுக்கான குத்தகையை புதுப்பித்து வந்தது.
1975-ம் ஆண்டு வரை சிற்றருவிக்கான குத்தகை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. அதன்பின்னர் தற்போது வரை குத்தகை புதுப்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட வனப்பாதுகாவலர் சார்பில், குற்றாலம் நகரப்பஞ்சாயத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், வருடத்துக்கு ஒருமுறை சிற்றருவி பயன்பாட்டுக்கான ஒரு ரூபாய் குத்தகையை புதுப்பிக்கவில்லை. மேலும் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதனால் இயற்கைக்கும், வனஉயிரினங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிற்றருவியில் யாரையும் குளிக்க அனுமதிக்கக்கூடாது. மேலும் சிற்றருவி பகுதியை பூட்டி தங்கள் வசம் எடுத்துக் கொள்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிற்றருவியை வனத்துறை கைப்பற்றக்கூடாது என வலியுறுத்தி குற்றாலம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஏலதாரர்கள் சார்பில் குற்றாலம் போலீசிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வனத்துறைக்கும், நகரப்பஞ்சாயத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story