கந்துவட்டி கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்ட வருவாய் அதிகாரியிடம் லேத் பட்டறை உரிமையாளர் மனு
கந்துவட்டி கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் லேத் பட்டறை உரிமையாளர் மனு கொடுத்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்கிற நஞ்சப்பன் தன்னுடைய குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–
நான் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். என்னுடைய மனைவியின் மருத்துவ செலவுக்காவும், தொழில் செலவிற்காகவும் எனது வீட்டை அடமானம் வைத்து, எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். இந்த தொகைக்கு இதுவரை பல லட்சம் ரூபாய் வட்டியாக கட்டி உள்ளேன். ஆனால் அந்த தம்பதியினர் தொடர்ந்து என்னிடம் வட்டி கேட்டனர்.
நான் செலுத்த முடியாது என்று கூறியபோது அவர்கள், ஏதேனும் வங்கியில் கடன் பெற்று தருகிறோம் என்று கூறி என்னையும், என் மனைவியையும் அழைத்துச்சென்று பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினர். நாங்கள் அதனை நம்பி வங்கிக்கடன் கிடைத்துவிடும் என்று கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நான் பெற்ற கடனை அடைக்க முடிவுசெய்து எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு, அந்த தம்பதியிடம் சென்றோம். அப்போது அவர்கள், நாங்கள் பெற்ற கடனுக்கு கந்து வட்டியாக ரூ.20 லட்சமும், அசலும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டுத்தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
அ.ம.மு.க. எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் அர்ஜூனன் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோட்டில் சத்தி ரோடு, கனிராவுத்தர்குளம், பி.பி.அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் மாட்டு இறைச்சி கடை, கோழிக்கடை மற்றும் பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதால் காற்று மாசு அடைந்து வருகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் வடிவேல் தலைமையில் 60–க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
அறச்சலூர் அருகே உள்ள சுள்ளிக்காடு பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். எங்கள் ஊரை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளதால், அங்கு இயற்கை உபாதை கழிக்க செல்லும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியின் பின்புறம் 6 அறைகள் கொண்ட பொதுக்கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு மாவட்ட ஜீவா தள்ளுவண்டி மற்றும் தெருவோர சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘நாங்கள் பவானியில் அந்தியூர் –மேட்டூர் பிரிவில் உள்ள பாவடித்தெரு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளுவண்டி கடை வைத்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இந்த நிலையில் ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்கள் தள்ளுவண்டிகளை உடைத்து சூறையாடி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் வாரிசு தாரர்கள் கொடுத்திருந்த மனுவில், ‘ஆங்கிலேய ராணுவ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மொடக்குறிச்சி அருகே உள்ள ஜெயராமபுரத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டாம் பரப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான செங்கோட்டையன் என்பவர் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–
வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேலப்பம்பாளையம் அருகில் டாஸ்டாக் கடை கட்டப்பட்டு உள்ளது. இந்த கடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. நான் கூலி தொழிலாளி என்பதால் வேலை முடிந்ததும் சலிப்பு தெரியாமல் இருக்க டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். தற்போது மதுகுடிப்பதற்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னம்மாபுரம், சோளங்காபாளையம், சிவகிரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வரவேண்டி உள்ளது. மேலும் மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது சில நேரங்களில் போலீசார் என்னை பிடித்துவிடுகிறார்கள். எனவே வேலப்பம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையென்றால் நான் பஸ்சில் சென்று குடித்துவர ஏதுவாக எனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.