புயலால் மீனவர்கள் பாதிப்பு: 1,500 பேருக்கு மானிய விலையில் படகுகள் வழங்க நடவடிக்கை


புயலால் மீனவர்கள் பாதிப்பு: 1,500 பேருக்கு மானிய விலையில் படகுகள் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 9:44 PM GMT)

புயலால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் 1500 பேருக்கு மானிய விலையில் படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

மத்திய வேளாண்மை துறை மந்திரி கிருஷ்ணராஜ் கன்னியாகுமரி வந்தார். அவரை நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சந்தித்து பேசினார். பின்னர் மத்திய மந்திரி கிருஷ்ணராஜ், கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயலின் போது கடலில் படகுகளை இழந்த சிறிய மீனவர்களுக்கு அரசு மானியத்தில் 1,500 பேருக்கு படகுகள் கொடுப்பது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உள்ளேன். படகின் விலையில் 50 சதவீதம் அரசு மானியமாக கொடுக்கப்படும். புயலில் ஏராளமான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் அடிக்கடி பிரச்சினைக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்படும்.

மத்திய அரசு குறிப்பாக சிறு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புயலின் போது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story