கொல்லம்-திருமங்கலம் நான்கு வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


கொல்லம்-திருமங்கலம் நான்கு வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Dec 2018 3:00 AM IST (Updated: 4 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொல்லம்-திருமங்கலம் நான்கு வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கடையநல்லூர், 

நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடையநல்லூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சைபுன்னிசா தலைமை தாங்கினார். நகர மாணவரணி அமைப்பாளர் காதர் தொகுப்புரையாற்றினார். நகர செயலாளர் சேகனா வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ஆவுடையப்பன், அப்துல்வகாப், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய காலம் போய் தற்போது தமிழ்நாடு சரிவுநிலையை எட்டியுள்ளது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்று படித்த இளைஞர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஒரு தொழிற்சாலைகள் கூட இங்கு வரவில்லை. கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலைக்காக ஏராளமான விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. இச்சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் 2 ஆண்டுகள் அரசு பணிகளில் இருந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என அரசாணை வெளியிட்டார். ஆனால் 2018-ம் ஆண்டு வரை சுமார் 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர அரசு வேலைக்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கனிமொழி எம்.பி.க்கு மகளிரணி சார்பில் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story