பயிர் சாகுபடி பாதிப்பு: இழப்பீடு கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு


பயிர் சாகுபடி பாதிப்பு: இழப்பீடு கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 3 Dec 2018 10:58 PM GMT (Updated: 3 Dec 2018 10:58 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயிகள் தங்களுக்கு பயிர் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சிவஞானம் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள கொப்புசித்தம்பட்டி, சாத்தூர் தாலுகாவில் உள்ள பெத்துரெட்டியபட்டி, ஓடைப்பட்டி, வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மகாராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:–

மாவட்டம் முழுவதும் மக்காச்சோள பயிரில் அமெரிக்கப்படை புழுக்கள் படையெடுப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

இது தவிர பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, கம்பு, வெள்ளைச்சோளம் ஆகிய பயிர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் செய்ய வேண்டிய நேரத்தில் பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பயிர்களுக்கான சேத மதிப்பீட்டுகளை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் அமெரிக்க படைப்புழுக்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் விதை வினியோகம் செய்த நிறுவனம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story