திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை
திருப்பரங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 28). இவர் கூத்தியார்குண்டில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கும், அந்த மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரிந்து சென்றுவிட்டார். அவர்களுக்கிடையே விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் வீட்டின் அருகே அவரது உறவினரான பிரகாஷ் (25), தனது மனைவியுடன் வசித்து வந்தார். பிரகாஷ் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
உறவினர்கள் என்ற முறையில் பிரேம்குமாரும், பிரகாசின் மனைவியும் நெருக்கமாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் பிரகாசுக்கு தெரியவரவே, பிரேம்குமாருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ் தோப்பூரில் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது மனைவியுடன் மதுரையை அடுத்த கருப்பாயூரணிக்கு சென்றார்.
அங்கு சென்ற பிறகு தொழில் தொடர்பாக பிரகாஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதனை அறிந்த பிரேம்குமார், கருப்பாயூரணிக்கு சென்று பிரகாசின் மனைவியுடன் கள்ளக்காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரகாசுக்கு தெரியவர 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை பிரேம்குமார் தனது வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் மாடிக்கு சென்று தூக்கத்தில் இருந்த பிரேம்குமாரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு தாயார் அமுதா வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது மகனை தாக்குவதை பார்த்து தடுக்க முயன்றார்.
உடனே அவர்கள் அமுதாவை கீழ் வீட்டினுள் அடைத்து கதவிற்கு பூட்டு போட்டு சிறைவைத்தனர். பின்னர் மீண்டும் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதனையடுத்து அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக அமுதா ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் பாலன், பாண்டி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.