மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் வைகோ ஆவேச பேச்சு


மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் வைகோ ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் என்று வைகோ ஆவேசமாக பேசினார்.

திருச்சி,

மேகதாதுவில் அணை கட்ட இருக்கும் கர்நாடகாவின் ரகசிய திட்டத்தை அறிந்து கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி கிருஷ்ணகிரியில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி எச்சரிக்கை செய்தோம். கர்நாடகத்தை சேர்ந்த மறைந்த அனந்தகுமார் மத்திய அமைச்சராக இருந்த போது அவரது வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது பற்றி முடிவு செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கேமதாதுவில் அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தார். கேடு கெட்ட மத்திய அரசு நவம்பர் 25-ந்தேதி அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுவதற்கான கூட்டம் அல்ல, மன்றாடுகிற கூட்டம் அல்ல. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிற போராட்டம். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூ.5,912 கோடியை கர்நாடகம் ஒதுக்கீடு செய்து விட்டது. அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு வந்து குவித்து விட்டார்கள். இந்த அணை கட்டப்பட்டால் நாம் அழியவேண்டியது தான்.

கடந்த காலங்களில் ராஜ ராஜசோழனின் பேரன், ராணி மங்கம்மாள் ஆகியோர் படை எடுத்து சென்று அணைகளை உடைத்து இருக்கிறார்கள். இந்தியா என்ற ஒரே நாட்டுக்குள் இருப்போம் என்ற உறுதி மொழியால் நாம் படை எடுத்து செல்ல முடியாது. ஒரே கேள்வி. என்ன செய்ய முடியும் இவர்களால் என்று மோடி நினைக்கிறார். லட்சம் பேர் கூடினார்கள். வீறு கொண்டு பேசினார்கள் என்ன செய்துவிடுவார்கள், அணையை கட்டுவோம் என நினைக்கிறார். நீங்கள் அணையை கட்டுங்கள். நாங்கள் உடைக்கமுடியாது. ஆனால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் என்று எச்சரிக்கிறேன்.

கஜா புயலால் சோழ மண்டலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை கூட கொடுக்காமல் மோடி ரூ.353 கோடி கொடுத்து முகத்தில் காரி உமிழ்ந்து இருக்கிறார். வீரமணி, ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள வேண்டும். கர்நாடகம் அணை கட்டும், மலையாளம் அணை கட்டும், ஆந்திரா அணை கட்டும். இதனை பார்த்துக்கொண்டு நாம் ஏன் இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற கேள்வி இளைஞர்கள் மனதில் எழும். தனிநாடாக இருந்தால் ஐ.நா. மன்றத்தில் முறையிட்டு பிரச்சினையை தீர்த்து கொள்ளலாம் என்று எண்ண தோன்றும்.

வானம் கண்ணாமூச்சி விளையாடுகிறது மேக கூட்டம். மோடிக்கு சொல்கிறேன். இந்த கருமேகங்களை விட எங்கள் கருங்கொடி படலம் மோடி விமானத்தை உள்ளே வர விடாது. தேர்தல் நேரத்தில் கூட மோடியை பிரசாரத்துக்கு தமிழகத்திற்குள் வர விடமாட்டோம். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்கவேண்டும். தேர்தல் முடியட்டும் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி வரும். மேகதாது அணை எவ்வளவு கட்டி இருந்தாலும் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

Next Story