விவசாயி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்: மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு


விவசாயி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்: மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 2:55 AM IST (Updated: 5 Dec 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக விவசாயி மீது புகார் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் வீராணம் வேடப்பட்டி ஏரிகாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதிக்கு நேற்று மதியம் வந்தார். பின்னர் அந்த பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மகன், மகள் ஆகியோர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று பெண்ணிடம் இருந்த கேனை பறித்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் என்னுடைய கணவரை பிரிந்து மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறேன். அதே பகுதியில் உள்ள விவசாயி, ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கினேன். இந்த பணத்தை வட்டியுடன் செலுத்தி விட்டேன். ஆனால் அந்த விவசாயி தற்போது மீண்டும் பணத்திற்கு கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுக்கிறார்.

ஒரு நாள் நடந்து செல்லும் போது அவர் என்னை அடித்து விட்டார். நான் கட்டும் வீட்டை கட்ட விடாமல் ரவுடிகளை கொண்டு மிரட்டி வருகிறார். மேலும் என்னுடன் உறவு வைத்து கொண்டால் தான் வீடு கட்ட விடுவேன் என்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது எனக்கும், என் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நான் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது புகார் கொடுப்பேன் என்றால் மீண்டும் எங்களிடம் தான் வரும் என்று கேலியும், கிண்டலும் செய்தார்கள். எனவே விவசாயி மீதும், நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் விசாரணைக்காக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்களிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். கலெக்டர் அலுவலகம் அருகே தனது மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story