கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு; மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஈரோடு கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கம் மற்றும் கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். நூற்றுக்கணக்கான வியாபாரிகள் திரண்டு வந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார் அவர்களை மாநகராட்சி அலுவலக வாசலில் தடுத்து நிறுத்தினர். சங்க நிர்வாகிகள் சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். இதனால் வியாபாரிகள் சிலர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் சென்றனர்.
இந்தநிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நின்றிருந்த மற்ற வியாபாரிகள் தங்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் வெளியில் வந்து வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏறப்பட்டது. அதன்பிறகு மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் அனைத்து வியாபாரிகளையும் உள்ளே வந்து மனு கொடுக்க அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு உள்ளே சென்றனர்.
கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள ஈ.கே.எம். அப்துல் கனி மார்க்கெட்டில் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தயாராகும் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஜவுளியை வாங்கி செல்கிறார்கள். ஈரோட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையாக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகிறோம்.
தற்போது கனி மார்க்கெட்டில் 740 வாரசந்தை கடைகளும், 330 தினசரி கடைகளும், 40 இரும்பு பெட்டி கடைகளும் என மொத்தம் 1,110 கடைகள் உள்ளன. இதில் ஏலம் விடப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை எந்த வாடகை பாக்கியும் இல்லாமல் முறையாக செலுத்தி வந்துள்ளோம்.
இந்தநிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் அமைந்துள்ள இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசிடம் இருந்து சுமார் ரூ.50 கோடி மானியமாக கிடைக்க பெற உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதுள்ள கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக வெளிவந்த தகவல் எங்களுக்கு மிகவும் மன வேதனையாக உள்ளது. கனி மார்க்கெட் கடைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
இந்த மார்க்கெட்டுக்கு பள்ளிபாளையம், குமாரபாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், சென்னிமலை, எடப்பாடி, திருச்செங்கோடு, சேலம், குமாரமங்கலம், மதுரை, தேனி, நத்தம் போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். அவர்கள் துணிகளை உற்பத்தி செய்ய பல வங்கிகள் மூலமாக கடன் பெற்று வியாபாரம் நடத்தி வருவதால் திடீரென புதிய வணிக வளாகம் கட்டுவது தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிறு, குறு வியாபாரிகளாக இருப்பதால் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே பண மதிப்பு இழப்பு, புதிய வரி கொள்கை போன்ற காரணங்களினால் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றும் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.