விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைக்க எதிர்ப்பு: 8 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம், விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
பல்லடத்தில் விவசாயிகள் சங்க கூட்டியக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பல்லடம்,
உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்க கூட்டியக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடும், உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலத்திற்கு ஆண்டு வாடகையும் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 17–ந்தேதி திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் காத்திருப்பு தொடர் போராட்டம் நடைபெறும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.