பாம்பன் தூக்குப்பாலத்தில் விரிசல்: திருச்சி –ராமேசுவரம் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி


பாம்பன் தூக்குப்பாலத்தில் விரிசல்: திருச்சி –ராமேசுவரம் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 Dec 2018 4:54 AM IST (Updated: 5 Dec 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன.

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தின் மையப்பகுதியின் இணைப்பு கம்பிகளில் நேற்று திடீரென சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மதுரையில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து என்ஜினீயர்கள் குழு பாம்பன் விரைந்தது.

இதனால், அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப்பட்டது. ராமேசுவரம் நோக்கி சென்ற அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில்நிலையத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்படி, மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56721) நேற்று மண்டபம்–ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில்(வ.எண்.56726) மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டது.

அதேபோல, திருச்சியில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56829) மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்க டிரைவர் மற்றும் உதவியாளர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்ததால் உரிய நேரத்தில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ரெயில் நீண்டநேரம் காத்திருந்தது. இதையடுத்து கார் மூலம் டிரைவர், உதவியாளர் ஆகியோர் மண்டபம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

மதுரையில் இருந்து நேற்று மாலை 6.10 மணிக்கு புறப்பட்ட பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56725) மண்டபம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16852) மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. ஆனால், இதுகுறித்த தகவல்கள் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் பயணிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மண்டபம் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.


Next Story