ஏம்பலம் தொகுதியில் 35 கிராமங்களை கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்தனர்
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 35 கிராமங்களை தத்தெடுத்தனர். அந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
பாகூர்,
கல்லூரி மாணவர்கள் மூலம் கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு நல பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை இந்திய அளவில் முதல் முறையாக புதுவை மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் மாணவர்கள் மூலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், பனித்திட்டு, சேலியமேடு, கரிக்கலாம்பாக்கம், குடியிருப்புபாளையம், அரங்கனூர், செம்பியம்பாளையம், கம்பளிக்காரன்குப்பம், கோர்க்காடு ஆகிய கிராம பஞ்சாயத்துகளின் கீழ் உள்ள 35 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளது.
அந்த கிராமங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பல்கலைக்கழக பேராசிரியர் தேவன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பெற்ற சுகாதாரமான மாநிலமாக மாற்ற முடியும். கிராமங்களை தத்தெடுக்கும் மாணவர்களின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களின் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் பேசும்போது, ‘‘இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன. அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் இணைந்து கிராமங்களளத் தத்தெடுத்து பல சிறப்பான தொண்டுகளை செய்கின்றனர். அனைத்து கல்லூரிகளும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களை இந்த மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் சீர்செய்ய உள்ளனர்’’ எனக்கூறினார்.
நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், அரசு அதிகாரிகள், முன்னால் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், கிராமங்களை தத்தெடுத்த கல்லூரி முதல்வர்கள், மற்றும் கிராம தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு கணக்கு அதிகாரி ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.