ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பதில்: அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்; 4 பேர் படுகாயம் - கொடிக்கம்பம் உடைப்பு-போலீஸ் குவிப்பு
ஆண்டிப்பட்டி அருகே ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பதில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அ.தி.மு.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டமனூர்,
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரத்தில், அஞ்சலி செலுத்துவதற்காக அ.ம.மு.க. கிளை செயலாளர் பீமராஜ் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று முன்தினம் இரவு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.
இதற்காக, அங்குள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தின் கீழ் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்தநிலையில் தங்களது கொடிக்கம்பத்தின் கீழே வைத்து, அ.ம.மு.க.வினர் அஞ்சலி செலுத்துவதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அ.தி.மு.க. கிளை செயலாளர் முத்துமணி தலைமையில் அந்த கட்சியினர் அங்கு திரண்டனர். அப்போது அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் ஒருவரையொருவர் தாக்கி இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த அ.தி.மு.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அ.தி.மு.க., அ.ம.மு.க. வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க. வை சேர்ந்த முத்துமணி, அவருடைய அக்காள் ஜோதிமணி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதேபோல் அ.ம.மு.க. வை சேர்ந்த பீமராஜ், அவருடைய மகன் முத்துக்குமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story