மாவட்ட செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் + "||" + The Communist Party of India (CPI) has been pushing the road to stabilize all those affected by the storm

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 320 பெண்கள் உள்பட 650 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளையும் சீரமைக்க தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். புயலால் உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை வாய்ப்பினை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.


திருவாரூர் மாங்குடி கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தின் போது சாலையின் அருகே அடுப்பை வைத்து சமையல் செய்தனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம், மணலி கடைத்தெரு, கடியாச்சேரி, மேட்டுப்பாளையம், விளக்குடி, பாமணி, மேலகொருக்கை, கட்டிமேடு, பிச்சன்கோட்டகம், மேலமருதூர், மடப்புரம், திருப்பத்தூர், ராயநல்லூர், கச்சனம், ஆலத்தம்பாடி ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, உலகநாதன், மாநில கட்டுபாட்டுக்குழு தலைவர் வக்கீல் வையாபுரி, கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரராமன், ஜோசப், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோட்டூர் ஒன்றியத்தில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தட்டாங்கோவிலில் ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், ஆதிச்சபுரம் ஆர்ச்சில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், கோட்டூரில் மாவட்டக்குழு உறுப்பினர் சிவசண்முகம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, திருநெல்லிக்காவலில் மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், திருப்பத்தூரில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பெருகவாழ்ந்தானில் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமக்கோட்டை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கணேசன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரளம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தீனகவுதமன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர். இதனால் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒளிமதி, ஆதனூர் பகுதிகளில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒளிமதியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், ஆதனூரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பாரதிமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபால் முன்னிலை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-தஞ்சை சாலை, குடவாசல்-மன்னார்குடி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மன்னார்குடியை அடுத்த கருவகுளத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கீழப்பாலம் பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலப்பாலம் பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மன்னார்குடி காலவாய்க்கரை பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மன்னார்குடியை அடுத்த சவளக்காரனில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் நாகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர் அருகே உள்ள மூலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் லெட்சுமாங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் தவபாண்டியன் தலைமையிலும், திருநெல்லிக்காவலில் ஒன்றியக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையிலும், சேந்தங்குடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், வாழச்சேரியில் விவசாய தொழிலாளர்கள் சங்க நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் மணியரசன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணக்கால் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் கோவி.மணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாதர் சங்க துணைத்தலைவர் வனரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட 170 பேரை குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடவாசல் அகரஓகை பாலத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்ரவேலு தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 9 பேரை குடவாசல் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி கைது செய்தார்.

வலங்கைமான் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் உதயகுமார், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல ஆவூர், ஆலங்குடி, கொட்டையூர் வெண்ணாற்று பாலம் ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் 49 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 320 பெண்கள் உள்பட 650 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
பொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
3. விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியல்
திருவரங்குளம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்
ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி
சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.