காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்


காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்குடி,

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்பட்டு பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று காரைக்குடி, புதுவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் காணப்பட்டது.

தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் காரைக்குடி செக்காலை ரோடு, நூறடிச்சாலை, கல்லூரிச்சாலை, 2–வது பீட், முதல் பீட், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மாலையில் பெய்த மழையினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பினர். இதையடுத்து மாலையில் இருந்து இரவு முழுவதும் இந்த பகுதியில் குளுமையான நிலை ஏற்பட்டது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த பலத்த மழையினால், இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story