புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:32 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். கான்கிரீட் வீடுகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரண அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். வீடுகளுக்கு முழுசேதம், பகுதி சேதம் என பிரித்து நிவாரணம் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கட்சியின் நகர செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொதுச் செயலாளர் ஷேக்இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 8 பேரை கைது செய்தனர்.

இதேபோல் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வீரராஜ், ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரதராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நீதிசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் உடனே வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, முனிசேகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர்.

Next Story