பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை: தடயத்தை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டை
ராமநாதபுரத்தில் பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை தொடர்பாக தடயத்தை வைத்து தனிப்படை போலீசார் நெல்லையில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் குடியிருந்து வருபவர் சேகர் என்பவருடைய மனைவி ராமேஸ்வரி(வயது 54). நிலஅளவைத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொசுப்புழு ஒழிக்க வந்துள்ளதாக கூறி 2 மர்ம நபர்கள் தாக்கி 9 பவுன் நகைகளையும், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் முக்கிய தடயம் கிடைத்துள்ளது.
அதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படை போலீசார் நெல்லைக்கு விரைந்துள்ளனர். இதேபோல ராமநாதபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டுவெடிகுண்டு வீசி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கூலிப்படையினர் குறித்த தகவல் தனிப்படையினருக்கு கிடைத்துள்ளது. கூலிப்படையினர் பிடிபட்டால்தான் கொலை சம்பவம் குறித்தும், பின்னணி தொடர்பாளர்கள் குறித்தும் தகவல் கிடைக்கும்.
எனவே தனிப்படை போலீசார் இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக நெல்லையில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.