மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா


மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 6 Dec 2018 5:30 AM IST (Updated: 6 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே மேகதாது பிரச்சினையில் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. இதைப்போல் புதுச்சேரி சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 30-ந்தேதி சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

ஆனால் சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் நேற்று தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான சிவா எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்தார். திடீரென சபாநாயகர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அறிந்ததும் சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கு வந்து சிவா எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்று அவரிடம் சபாநாயகர் வைத்திலிங்கம் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகரின் அலுவலகத்துக்கு வந்தனர். சபாநாயகர் வைத்திலிங்கம் இருக்கை அருகே தரையில் அமர்ந்து சிறப்பு சட்டமன்றத்தை கூட்டக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை இருக்கையில் அமர்ந்து பேசுமாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதை மறுத்து தரையில் உட்கார்ந்தபடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், கேரளாவில் இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனது அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடமும் செல்போனை கொடுத்து முதல்-அமைச்சருடன் பேச செய்தார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை வந்து இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசி அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அவரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் புதுவையில் காங்கிரஸ் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்த உடனேயே சட்டமன்றம் கூட்டப்படுகிறது. அவர்களுடன் நாமும் உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச்சென்றனர்.

Next Story