மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என சேலத்தில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் தான் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதற்காக தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டும் எந்த பயனும் இல்லை. ஜவ்வரிசிகள் வடமாநிலங்களுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஜவ்வரிசி பயன்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தி, நியாயமான விலையில் வழங்க வேண்டும். ஜவ்வரிசியின் நன்மை மற்றும் ஆரோக்கியம் குறித்து அதிகாரிகள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சத்துணவுகளில் மாணவர்களுக்கு ஜவ்வரிசி பாயசம் கொடுக்கலாம்.
விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் கணவன், மனைவி போல் செயல்பட வேண்டும். அப்போது தான் இரண்டு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். அதிகாரிகள் காரில் சென்றால், நாங்கள் ஒரு மொபட்டில் செல்லவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் காலம் தாழ்த்தாமல் மரவள்ளிக்கிழங்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மழை பொய்க்கும்போது மரவள்ளி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வட்டாரம் தோறும் உணவு திருவிழா நடத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர். ஆலை உரிமையாளர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், மரவள்ளிக்கிழங்கு மூலம் பெறப்படும் உணவு பொருட்கள் சிறை, பள்ளி, கல்லூரி, ரெயில்வே ஆகிய இடங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைக்கேட்ட கலெக்டர் ரோகிணி, விவசாயிகள் பிரச்சினை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள், அரசு அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story