மாவட்ட செய்திகள்

ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை: போலீஸ்போல் நடித்து பெண்களிடம் நகை பறித்த 6 பேர் கைது - 25 பவுன் நகை மீட்பு + "||" + Robbery in various places including Erode: Police arrest six arrested men - 25-pound jewelry recovery

ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை: போலீஸ்போல் நடித்து பெண்களிடம் நகை பறித்த 6 பேர் கைது - 25 பவுன் நகை மீட்பு

ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை: போலீஸ்போல் நடித்து பெண்களிடம் நகை பறித்த 6 பேர் கைது - 25 பவுன் நகை மீட்பு
ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ்போல் நடித்து பெண்களிடம் நகை பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஈரோடு,

ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 3-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மனைவி லீலா (வயது 45). இவர் கடந்த மாதம் 14-ந் தேதி வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பேர் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு, லீலாவிடம் நகையை பத்திரமாக எடுத்து செல்லுமாறு கூறினார்கள். மேலும், அவரிடம் இருந்து நகையை பெற்றுக்கொண்டு அவர்கள் ஒரு பொட்டலத்தில் மடித்து கொடுப்பதை போல நடித்து ஏற்கனவே தயாராக வைத்திருந்த மற்றொரு பொட்டலத்தை லீலாவிடம் கொடுத்துவிட்டு நகையை அபேஸ் செய்தனர்.


இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதேபோல் ஈரோடு கொல்லம்பாளையம், பெருந்துறை உள்பட மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து சம்பவம் நடந்தது.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், தாமோதரன், போலீசார் என்.செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், லோகநாதன், பெரியதுரை ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் பதிவான முகங்களை வைத்து போலீசார் கோவை, ஓசூர், ராம நாதபுரம், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் தேடு தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஈரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் தார்நாத் வித்யகிரி ஜன்னாத்நகரை சேர்ந்த இஹாசின் (43), மெய்டிஹாசன் (35), ஜாபர்உசேன் சிராஜி (61), மிர்ஜா சையது (48), சமீர் அலி (38), முருகேஷ் (34) ஆகியோர் என்பதும், அவர்கள் 6 பேர் கொண்ட கும்பல் என்பதும், பல்வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களை வழிமறித்து போலீஸ்போல் நடித்து நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளையும், ஒரு காரையும் மீட்டனர். மேலும், இந்த 6 பேர் கொண்ட கும்பல் ஈரோடு, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகையை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசார் 8 பேரையும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டி, பரிசுத்தொகையை வழங்கினார்.

குற்றவாளிகளை பிடித்தது எப்படி? - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்தது எப்படி என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் போலீஸ்போல் நடித்து நூதன முறையில் நகையை பறித்து சென்ற சம்பவம் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தனியாக நடந்து சென்ற பெண்களை குறிவைத்து அவர்களுடைய கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் சிலர் நகையை பறித்து சென்றனர். அவர்கள் பெண்களிடம் போலீசார் என கூறி, குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் தங்களது நகையை கழற்றி கொடுங்கள், பொட்டலமாக மடித்து தருகிறோம் என்று பெற்று கொள்கின்றனர். பின்னர் நாய் வருகிறது, கார் வருகிறது என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கவனத்தை திசை திருப்பி, கல் மடித்து வைத்த பொட்டலத்தை பெண்களிடம் கொடுத்துவிட்டு நகையை பறித்து செல்கிறார்கள்.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்போன் எண், கண்காணிப்பு கேமரா காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவானவர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தேடினார்கள். அப்போது ஒரே கும்பல் ஈரோடு, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் வாகன சோதனையில் பிடிபட்ட 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஜாபர்உசேன் சிராஜி என்பவர் அந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்ததும், மற்றவர்கள் கூலிக்கு வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு யாராவது பேசினால் அவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். எனவே பெண்கள் அவசியம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா என்பது 3-வது கண் என்று கூறுவார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை அதுதான் முதல் கண். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதுதான் குற்ற வழக்குகளை பிடிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. கல்வி நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக் களை பொருத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் சட்டம் உள்ளது.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் மீண்டும் போலீஸ் போல் நடித்து, பெண் வியாபாரியிடம் 4 பவுன் நகை அபேஸ்
ஈரோட்டில் மீண்டும் போலீஸ் போல் நடித்து பெண் வியாபாரியிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. ஈரோட்டில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராததால் நகைக்கடை முற்றுகை
ஈரோட்டில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராததால், நகைக்கடை முற்றுகையிடப்பட்டது.
3. ஈரோடு: நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
4. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதிகளை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்.
5. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.