தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி திருட்டு


தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி திருட்டு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 4:45 PM GMT)

தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சந்திரிகா (வயது 65). இவர்களது மகள் வீடு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ளது. நேற்று சந்திரிகா மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் பார்வதிபுரத்தில் இருந்து இட்டகவேலிக்கு பஸ்சில் சென்றார்.

அந்த பஸ், தக்கலை பஸ் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றதும் சந்திரிகா தனது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார். அவரை பயணிகள் தேற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து சந்திரிகா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் சந்திரிகாவின் அருகே 2 நரிக்குறவர் இன பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளனர். தக்கலை பஸ் நிலையம் வந்ததும் அவர்கள் இறங்கி சென்றனர். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் சந்திரிகாவின் கழுத்தில் கிடந்த நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதனால், தக்கலையில் இறங்கிய நரிக்குறவர் பெண்கள் நகையை திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண்களை தேடி வருகிறார்கள்.

Next Story