தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது ரூ.50 லட்சம் பறிமுதல்


தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது ரூ.50 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2018 3:45 AM IST (Updated: 7 Dec 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.1 கோடி நகை மோசடி

தூத்துக்குடி மட்டக்கடையில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 6 ஆயிரத்து 300 பேர் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் 3 மாதத்துக்கு ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி அதிகாரிகள் நகையை பரிசோதனை செய்த போது, சில நகைகள் காணாமல் போய் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தனர். இதனால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, அங்கு இருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து வங்கி கோட்ட மேலாளர் முகமது இஸ்மாயில், வங்கி நகை மதிப்பீட்டாளர் தூத்துக்குடியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் சிலர் மீது வடபாகம் போலீசில் கடந்த 26-ந்தேதி புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரத்தை தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலையில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நிருபர்களிடம் மேலும் கூறியதாவது;-

அந்த வங்கியில் 22 நபர்களின் பெயரில் வைக்கப்பட்டு இருந்த 73 தங்க நகைக்கடன் கணக்குகளில் உள்ள நகைகள் போலியானவை. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 ஆயிரம். இந்த இழப்பு வங்கியில் பணிபுரியும் தங்க நகை மதிப்பீட்டாளர் தூத்துக்குடியை சேர்ந்த சப்பாணி முத்து மகன் சண்முகசுந்தரம் (வயது 47) என்பவரால் ஏற்பட்டதாக கூறி, வங்கி கோட்ட மேலாளர் முகமது இஸ்மாயில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நகரதுணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தங்க நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரத்தை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், தான் தனக்கு தெரிந்த பலரின் பெயரில் வங்கியில் போலியான நகைகளை அடகுவைத்து வங்கியை ஏமாற்றி சுமார் ரூ.1 கோடியில், தனக்குள்ள கடன்களை அடைத்தும் தனது தேவைகளை பூர்த்தி செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் ரூ.50 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த உள்ளோம். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். விரைவில் மீதி பணத்தையும் மீட்போம். இந்த நடவடிக்கை துரிதமாக நடந்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story