பொன்னேரி அருகே லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் கசிவு


பொன்னேரி அருகே லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் கசிவு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 7:17 PM GMT)

பொன்னேரி அருகே லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாறு 66 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது இந்த ஆற்றின் குறுக்கே பொன்னேரியை அடுத்த லட்சுமிபுரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரூ.5 கோடியே 28 லட்சம் செலவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அணை கட்டினர். இதனை ஆரணியாறு வடிநில உப கோட்டத்தினர் பராமரித்து வருகின்றனர். ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மூலம் 3037.5 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக ஆரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த அணைக்கட்டில் நீர் இருப்பு 3.200 மீட்டராக உள்ளது. இன்னும் 1 மீட்டர் உயரத்திற்கு நீர்வரத்து அதிகரித்தால் அணைக்கட்டில் நீர் நிரம்பி வழியும். இந்தநிலையில் அணைக்கட்டின் இடைப்பட்ட பகுதியான 3 இடங்களில் சிறு துவாரம் ஏற்பட்டு நீர் வெளியேறுகிறது. இதனால் அணைக்கட்டு பாதிக் கும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் அணைக்கட்டில் இருந்து பெரும்பேடு செல்லும் வரத்து கால்வாய் பகுதியில் சிறு பள்ளம் ஏற்பட்டு நீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணியாறு கோட்ட செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் ஜெயகுரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சுரேஷ், தாசில்தார் புகழேந்தி ஆகியோர் அணைக்கட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அணைக்கட்டில் உள்ள அனைத்து கதவணைகளும் துருபிடித்து உடையும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக் கட்டை முழுமையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story