திருமருகலில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்


திருமருகலில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-07T00:50:43+05:30)

திருமருகலில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் கடந்த மாதம் 16-ந்தேதி கஜா புயல் மற்றும் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையினா,் மின்வாரிய துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், திருமருகல் ஒன்றியத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்தநிலையில் திருமருகல் பெருமாள் வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், குழந்தைகள் நல அங்கன்வாடி, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், குடியிருப்புகள் என பல்வேறு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த கட்டிடங்களை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அந்த வழியில் செல்லும் பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி சென்று வருகின்றனர். இந்த மழைநீர் அப்பகுதியில் கடந்த 20 நாட்களாக தேங்கி நிற்பதால் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் மிதந்து பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், திருமருகல் அண்ணாபூங்கா தெருவில் தொலைபேசி நிலையம் எதிரே மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியிலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவை இயங்கி வந்த, பழைய கட்டிடங்கள் மீது புயலால் சாய்ந்து மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றியும், மரங்களை அப்புறப்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story