தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் வாழை சேதமடைந்ததால் இலைகள் அறுவடைபணி பாதிப்பு


தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் வாழை சேதமடைந்ததால் இலைகள் அறுவடைபணி பாதிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 4:15 AM IST (Updated: 7 Dec 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் வாழை சேதமடைந்ததால் இலைகள் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டது. இந்த புயல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கும் இடையே கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றினால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் தென்னை, மா, பலா, புளியமரம், அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்தது. இது தவிர நெல், வாழை, மக்காச்சோளம், எலுமிச்சை, வெற்றிலை கொடிக் கால் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பூதலூர் தாலுகாவில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பூவன் ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கிருந்து வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதே போல் வாழை இலைகளும் இங்கிருந்து அறுவடை செய்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதற்காக தினமும் காலை முதல் அறுவடை பணிகள் தொடங்கி மாலையில் இலைகள் கட்டப்பட்டு திருவையாறுக்கு சரக்கு ஆட்டோக்களில் அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பாக தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் பஸ்களில் மட்டும் தினமும் 1000 கட்டு வாழை இலைகள் அனுப்பப்படும்.

ஆனால் கடந்த 16-ந்தேதி வீசிய கஜா புயல் காரணமாக வாழை சாகுபடி பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வாழை குலை தள்ளி சில வாரங்கள் ஆன நிலையில் சாய்ந்தன. சில வாழைகள் குலை தள்ளுவதற்கு முன்பே சாய்ந்த விட்டன. பல இடங்களில் வாழைகள் இடையில் முறிந்து சாய்ந்து கிடந்தன.

இந்த காற்றினால் வாழை இலைகளும் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் வாழை இலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் திருவையாறு, பூதலூர் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது ஆங்காங்கே ஒருசில தொழிலாளர்கள் தான் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதுவும் குறைந்த அளவு தான் இலைகள் அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் இலைகள் வழக்கம்போல் நீளமாக இல்லாமல் அதை விட சற்று குறைவாகத்தான் உள்ளன. தற்போது திருமண நிகழ்ச்சிகள் போன்றவை இல்லாததால் இலையின் விலையும் குறைவாகத்தான் உள்ளது. 1 இலை ரூ.60 பைசா முதல் ரூ.1 வரை வாழைதோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

Next Story