பருத்தி வாங்கி ரூ.3¼ கோடி மோசடி: தொழில் அதிபரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


பருத்தி வாங்கி ரூ.3¼ கோடி மோசடி: தொழில் அதிபரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 7:50 PM GMT)

பருத்தி வாங்கி ரூ.3¼ கோடி மோசடி செய்த வழக்கில் தொழில் அதிபரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

கோவை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ஷேக் அப்துல்காதர் (வயது 38). தொழில் அதிபர். இவர் கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். பருத்தி வியாபாரியான இவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (45) என்பவரிடம் பருத்தி வாங்கியதில் ரூ.2 கோடி பாக்கி வைத்து உள்ளார்.

இந்த தொகையை சீனிவாசன் கேட்டபோது, தான் கோவையில் புதிதாக மில் வாங்க உள்ளதால் அதற்கு ரூ.1¼ கோடி தேவைப்படுகிறது. அதை கொடுங்கள், மில் வாங்கியதும் ரூ.3¼ கோடியை திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். உடனே சீனிவாசனும் ரூ.1¼ கோடி கடனாக கொடுத்தார். பின்னர் தனக்கு கொடுக்க வேண்டிய ரூ.3¼ கோடியை திரும்ப கேட்டபோது அவர் கொடுக்கவில்லை.

பலமுறை கேட்டும் கிடைக்காததால் இந்த மோசடி குறித்து சீனிவாசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் அப்துல்காதரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று போலீசார் முடிவு செய்தனர். எனவே ஷேக்அப்துல்காதரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்து, அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி கொடுத்தார். அதன்படி போலீசார் ஷேக் அப்துல்காதரை நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ஷேக் அப்துல்காதரின் வீடு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது. அவரை அங்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் மோசடி செய்த பணத்தில் ரூ.50 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்து உள்ளோம்.

மீதமுள்ள பணத்தை என்ன செய்தார்? சொத்துகள் வாங்கி குவித்தாரா? அல்லது உறவினர்களிடம் கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story