பூச்சிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் முயற்சி 45 பேர் கைது


பூச்சிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் முயற்சி 45 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 8:40 PM GMT)

கல்லக்குடியில், பூச்சி தாக்குதலில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்காச்சோள பயிர்களில் இதுவரை இல்லாத அளவில் வீழ்படை பூச்சிகள் பயிரின் குருத்து மற்றும் கதிர்களில் உருவாகி, பயிர்களை தின்று அழித்து வருகின்றன. மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், பூச்சி தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளான கல்லக்குடி, மால்வாய், வரகுப்பை, மேலரசூர் மற்றும் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதியான பளிங்காநத்தம், சன்னாவூர், காவட்டாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருச்சி- சிதம்பரம் சாலையில் கல்லக்குடி மால்வாய்் நால்ரோட்டில் திரண்டனர்.

அவர்கள், கடந்த ஆண்டு ஆந்திர மாநில முதல்-மந்திரி மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நிறுவனங்கள் மூலமாக இழப்பீட்டு தொகை பெற்று தந்ததைபோல், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்தை தமிழக அரசு, மக்காச்சோள விதை நிறுவனம் மூலமோ அல்லது அரசின் சார்பிலோ வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் அங்கு வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்தனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை கைது செய்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் மொத்தம் 41 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அதே கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்கசண் முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 3 பேர் கோரிக்கை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மறியல் செய்யப்போவதாக அங்கு வந்தனர். அவர்களை லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், ரேணுகா ஆகியோர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story