மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை கண்டித்து வருகிற 16-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு


மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை கண்டித்து வருகிற 16-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 9:36 PM GMT)

மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து வருகிற 16-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து வருகிற 16-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

கோஷங்களை எழுப்பினர்

மேகதாதுவில் அணை கட்டும் பணிளை உடனே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று ராமநகரில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு ஆட்டுக்கு சால்வை போர்த்தி, மைசூரு தலைப்பாகை அணிவித்து வாட்டாள் நாகராஜ் மரியாதை செய்தார். அணை கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தடை விதிக்கவில்லை

மேகதாது திட்டத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இனி யாருடைய அனுமதியும் தேவை இல்லை.

எந்த கோர்ட்டும் தடை விதிக்கவில்லை. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு ேதவை இல்லாமல் காலதாமதம் செய்கிறது. தமிழகத்திற்கும், இந்த திட்டத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இந்த திட்டத்தால் அந்த மாநிலத்திற்கு எந்த அநீதியும் ஏற்படாது.

தமிழக அரசை கண்டித்து...

குடிநீருக்கு போக மீதமுள்ள நீர் தமிழகத்திற்கு தான் செல்லும். அதனால் தமிழகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 16-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அன்றைய தினம் கர்நாடகம்-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சாலையை மூடுவோம். கர்நாடக சட்டசபை கூட்டம் வருகிற 10-ந் தேதி பெலகாவியில் தொடங்குகிறது. முதல் நாளே இந்த திட்டம் குறித்து முதல்-மந்திரி விவரங்களை வழங்க வேண்டும்.

அதிக அக்கறை...

நீர்ப்பாசனத்துறை மந்திரியாக உள்ளவரின் தொகுதியில் தான் இந்த திட்டம் வருகிறது. அதனால் அவர் அதிக அக்கறை எடுத்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Next Story