கோச்சடை, துவரிமான் பகுதிகளில் வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு


கோச்சடை, துவரிமான் பகுதிகளில் வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 9:58 PM GMT)

மதுரையை அடுத்த கோச்சடை, துவரிமான், கொடிமங்கலம் பகுதி வைகை ஆற்றில் சாக்குப்பைகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரையை அடுத்த கோச்சடை, துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம் கிராமங்கள், வைகை ஆற்றின் கரையில் உள்ளன. இப்பகுதியில் ஆற்றின் உள்ளே கிணறுகள் அமைத்து மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம், கருமாத்தூர், நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் உள்ள வைகை ஆற்றில் மணல் திருட்டு தாராளமாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் லாரி, டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடந்த மணல் திருட்டு காரணமாக ஆற்றுப்பகுதி மணல் இன்றி பாறைகளாக மாறிவிட்டது. இதனால் ஆற்றின் தண்ணீர் செல்லும் பாதையும் மாறியுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேலக்கால் முதல் கோச்சடை வரை உள்ள ஆற்றில் ஓரளவு மணல் தேங்கியுள்ளது. இந்த மணலை குறிவைத்து சிலர் மணல் திருட்டில் இறங்கியுள்ளனர். தாராப்பட்டி, கொடிமங்கலம் பகுதியில் பகல் நேரங்களிலேயே சாக்குப்பைகளில் மணலை நிரப்பி அவற்றை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கரையில் சேர்க்கின்றனர். பின்னர் அங்கிருந்து மணல் மூடைகளை வேன்களில் ஏற்றிச் சென்று விற்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆனால் இதனை பொதுப்பணி, கனிமவளம், வருவாய், காவல் துறையினர் கண்டும், காணாதது போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதவிர இரவு நேரங்களில் லாரி, டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்கிறது.

எனவே மணல் திருட்டை கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story