கிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில், அம்பேத்கர் சிலை பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்


கிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில், அம்பேத்கர் சிலை பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:09 PM GMT (Updated: 6 Dec 2018 10:09 PM GMT)

கிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில் மற்றும் அம்பேத்கர் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளை அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

பாகூர்,

புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கிராமத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் நுழைவுவாயில் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலுவிடம் அமைச்சர் கந்தசாமி பணிகள் தொடங்குவதற்கு அடையாளமாக செல்கல்லை எடுத்துக்கொடுத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:- கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த உத்திரவேலு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு மக்களுக்கு பல நலப்பணிகளை செய்தவர். அவர் நமது கிராமத்தை சேர்ந்தவர் என பெருமை கொள்ள வேண்டும். இங்கு அம்பேத்கர் நுழைவுவாயில் அமைய உள்ளது. இதே இடத்தில் உத்திரவேலு சிலையும் வைக்கவுள்ளோம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அவரிடம் சிறு வயதிலிருந்து பழகியுள்ளேன்.

மூன்று முறை என்னை கொலை செய்ய திட்ட மிட்டனர். மோதல் சம்பவம் ஏற்படக்கூடாது என்று கருதி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் அரசியலில் இருப்பதால் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால்தான் நான் வம்பாப்பேட் பகுதியில் வீடு கட்டிக்கொண்டு சென்றுள்ளேன். என் தந்தை கூலி வேலை செய்தவர். கடின உழைப்பாலும் உங்களுடைய ஆதரவாலும் நான் முன்னுக்கு வந்துள்ளேன் . நீங்களும் என்னைப்போல் ஆகவேண்டும். நமக்குள் இருக்கும் மோதல்களை கைவிட வேண்டும். மோதல் தொடர்ந்தால் தொகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகி விடும்.

கிருமாம்பாக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் கிராமம். இதனால் மற்ற கிராம மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் சில திட்டங்களை அறிவித்தேன். அதை செயல்படுத்த முடியவில்லை.. இருப்பினும் நான் கூறியபடி கடலோர சாலை, திருமண மண்டபம், கிருமாம்பாக்கத்தில் நவீன படகுத்துறை, வீடுகள், கறவை மாடு ஆகியவற்றை பெற்றுத்தருவேன். மன கசப்புகளை மறந்து தொகுதிவளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முன்னாள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவி முனியம்மாள், கிருமாம்பாக்கம் அரசு ஊழியர் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் செல்வம், பொருளாளர் ஆனந்தவேலு, என்ஆர்.காங்கிரஸ் பிரமுகர் லட்சுமிகாந்தன், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆறுமுகம், அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story