பெண்ணாடத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில்: போலீஸ் நிலையத்திற்குள் தொழிலாளிக்கு கத்திக்குத்து


பெண்ணாடத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில்: போலீஸ் நிலையத்திற்குள் தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 11:03 PM GMT)

பெண்ணாடத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ் நிலையத்திற்குள் தொழிலாளியை வங்கி ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது விவசாயி. இவரது முறை பெண்ணான அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் இடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பி.எஸ்சி. கணிதம் படித்துள்ள இளம் பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஏனெனில் அவர், அதே கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய தொழிலாளி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இளம் பெண் தனது திருமணத்தின் போது வழங்கப்பட்ட நகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம் பெண்ணை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில், திருமணமான பின்னரும் இளம் பெண், தனது காதலனை மறக்க முடியாமல் இருந்துள்ளார். இது தற்போது கள்ளக்காதலாக மாறி, அந்த தொழிலாளியுடன் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது செல்போன் எண்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று உளுந்தூர்பேட்டை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, அவர்கள் இருவரையும் பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இளம் பெண், தனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகையை விருத்தாசலத்தில் உள்ள நகைக்கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கிருந்த இளம்பெண்ணின் தம்பி, தனது அக்காளை வீட்டை விட்டு அழைத்து சென்ற தொழிலாளியை திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் குத்திய இளம் பெண்ணின் தம்பி என்ஜினீயரிங் படித்துவிட்டு விருத்தாசலத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். தனது சகோதரியின் வாழ்க்கையை பாழாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த வங்கி ஊழியர் போலீஸ் நிலையத்திற்குள் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story